பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது


பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது
x
தினத்தந்தி 31 July 2021 6:31 PM GMT (Updated: 31 July 2021 6:31 PM GMT)

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

க.பரமத்தி
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள குள்ள கவுண்டனூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 32). இவர் மகாராஷ்டிரா மாநிலம், ஜாம் கேடு என்ற இடத்தில் 2 போர்வெல் லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அங்கு தொழில் போட்டி காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஷாஜி மாருதி டூஜே என்பவர் 2 லாரியும் பிடுங்கி வைத்து கொண்டார். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் லாரிகளை  தரவில்லை. இதனையடுத்து கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள முன்னுரை சேர்ந்த சசிகுமார் (37) என்பவரை அணுகி லாரிகளை மீட்டுத்தருமாறு பாலசுப்பிரமணி கேட்டுக்கொண்டார். அதற்கு சசிகுமார் நான் கரூர் மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் ஆட்கள் உள்ளார்கள், காவல்துறையிலும் எனக்கு அனைத்து நபர்களையும் தெரியும் எனக்கூறி பாலசுப்பிரமணியத்திடம் ரூ.2 லட்சத்தை கடந்த வருடம் நவம்பர் மாதம் பெற்றுள்ளார். 10 மாதம் ஆகியும் இதுவரை லாரிகளை மீட்டும் தரவில்லை, பணத்தையும் தரவில்லையாம். பலமுறை போனில் கேட்டும் நேரில் வந்தும் சரியான பதில் தராததால் நேற்று முன்தினம் சசிகுமாரின் அலுவலகத்திற்கு பாலசுப்பிரமணி வந்து அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சசிகுமார் பணத்தை தர முடியாது என்றும் கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணி க.பரமத்தி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சசிகுமார் மீது தகாத வார்த்தையால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பணம் மோசடி செய்ததாகவும் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து கரூர் சிறையில் அடைத்தனர்.

Next Story