வழக்கில் செவிலியரின் பெயரை சேர்க்காமல் இருக்க லஞ்சம்; 2 பெண் போலீஸ் பணியிடை நீக்கம்


வழக்கில் செவிலியரின் பெயரை சேர்க்காமல் இருக்க லஞ்சம்; 2 பெண் போலீஸ் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 5 Aug 2021 5:03 PM GMT (Updated: 5 Aug 2021 5:03 PM GMT)

மாணவியை தாயாக்கிய தாத்தா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செவிலியரின் பெயரை சேர்க்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாக 2 பெண் போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவர், 10-வகுப்பு படித்து வரும் 15 வயதுடைய தனது பேத்தியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் முதியவர், 65 வயதுடைய ஒரு பெண் மூலம் மாணவியை சிகிச்சைக்காக மணம்பூண்டியில் செவிலியர் ராஜாமணி(70) என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அங்கு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.  பின்னர் மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் உனக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக அவரது தாத்தாவும், அந்த பெண்ணும் தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த குழந்தையை அந்த பெண் ஒரு பையில் வைத்து எடுத்து சென்று ஆற்றில் வீசினார். 

வழக்கில் பெயர் சேர்க்காமல்... 

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்     பதிவு செய்து முதியவர் மற்றும் அவருக்கு உதவி செய்த பெண் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் செவிலியர் ராஜாமணியை சேர்க்காமல் இருப்பதற்காக  திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவழகி, ஏட்டுகள் கோகிலா, கீதாராணி ஆகியோர் ராஜாமணியிடம் ரூ.23 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியா ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

பணியிடை நீக்கம் 

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் விசாரணை நடத்தினார். இதில் போலீசார் லஞ்சம் பெற்றது தெரியவந்ததாக தெரிகிறது.இதையடுத்து ஏட்டுகள் கோகிலா, கீதாராணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும், இன்ஸ்பெக்டர் இளவழகியை கள்ளக்குறிச்சி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

Next Story