திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?
x
தினத்தந்தி 5 Aug 2021 8:52 PM GMT (Updated: 2021-08-06T02:22:09+05:30)

கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து திருவட்டார் ஆதிேகசவ பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது? என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் சாசனம் செய்யப்பட்டதுமாகும்.  
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கட்டப்படுவதற்கு முன்பு 1248 ஆண்டுகள் முற்பட்டது, திருவட்டார் கோவில் என மதிலக கிரந்தம் என்ற நூல் கூறுகிறது. திருவட்டார் பரளியாற்றின் கரையில் 3 ஏக்கர் 27 செண்ட் நிலத்தில் அமைந்துள்ள இக்கோவில் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுகிறது. இந்த கோவில் கோதை, பரளி மற்றும் தாமிரபரணி என்ற மூன்று ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. பரளியாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலை சுற்றி ஓடுவதால், 'வட்டாறு' என்றும், பின்னர் 'திருவட்டாறு' என்றும் அழைக்கப்படுகிறது. 
புனரமைப்பு
தற்போது கருவறை கூரைப்பகுதி புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோவில் கருவறை மூன்று அறைகளைக்கொண்டது. இங்கு ஆதிகேசவப்பெருமாள் பாம்பணை மேல் பள்ளிகொண்டு இடது கை தூக்கிப்போட்ட நிலையிலும், வலது கை யோக முத்திரை அணிந்தும், தெற்கில் தலைவைத்தும் மேற்கு திசை நோக்கி பள்ளிகொண்டு அருளுகிறார். திருமுடிமேல் ஆதிகேசன் குடைபிடித்துள்ளது. சயன கோல இந்த ஆதிகேசவப் பெருமாள் சிலை கல்லால் ஆன சிலையல்ல.
சயனகோலம் 16 ஆயிரத்து எட்டு சாளகிராமம், கடுகு சர்க்கரை யோகத்தால் அமைக்கப்பட்டதாகும். பங்குனி மாதம் 3-ந் தேதியிலிருந்து 8-ந் தேதி வரையும் புரட்டாசி மாதம் 3-ந் தேதியிலிருந்து 5-ந் தேதி வரையும் சூரியன் மறையும் போது செங்கதிர்கள் திரு உருவத்தின் மீது விழும் படியாக கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3 வாயில்கள்
சிரசு, உடல், பாதம் என மூன்று வாயில்கள் வழியாக பகவானை தரிசிக்க முடியும். சுவாமியின் நடுவாயில் கோவில் பீடத்தில் நித்தியபலி ஸ்ரீபலி மூர்த்தி, உற்சவ மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் உள்ளன. 
தற்போது பாலாலயத்தில் உற்சவ மூர்த்தி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. 
இங்கு ஸ்ரீகிருஷ்ணன், அய்யப்பசுவாமி ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது. 
கதை
பக்தர்களை காக்க ஆதிகேசவ பெருமாள் இங்கு வந்ததற்கு ஒரு கதையை கூறுகிறார்கள்.
பிரம்மதேவன் தட்சண மேருவில் உள்ள காஞ்சன கிரியில் வைத்து விஷ்ணு தரிசனம் கிடைப்பதற்காக அதர்வண வேதத்தை உச்சரித்து ஒரு யாகம் நடத்த ஆரம்பித்தார். பிரம்மனின் மந்திர உச்சரிப்பில் அபசுரம் கலந்ததால் தீபடர்ந்து எரிந்து ஆகாயம் வரை சென்றது. அந்த தீயிலிருந்து கேசன், கேசி என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். கேசன் மலையபர்வதத்தில் அமர்ந்து பிரம்மாவை நோக்கி தவமிருந்தான். மேலும் பல வரங்கள் கேட்டு தன் தவ வலிமையை பெருக்கிக்கொண்டான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான்.
 கேசனின் தங்கை ஒரு முறை நாகலோகம் சென்றாள். அங்கு இந்திரனைக்கண்டாள். அவனது அழகில் மயங்கி தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டாள். இந்திரன் மறுத்தான். இந்திரன் தன்னை உதாசீனப்படுத்தியதால் அவனைப்பழிவாங்க நினைத்தாள் கேசி.
அதைத்தொடர்ந்து இந்திரன் தன்னை பலாத்காரம் செய்யமுயன்றதாக கேசி கூற கோபாவேசத்துடன் இந்திரனைத்தேடி நாகலோகம் செல்கிறான் கேசன். இந்திரனோடு ஏழுநாட்கள் போரிட்டு இறுதியில் கேசன் வெற்றி பெற இந்திரன் ஓடி ஒளிகிறான். கேசன் அரம்பையர்களை சிறைபிடிக்கிறான். சூரியனை, சந்திரனை, தேவர்களை அவமானப்படுத்துகிறான். முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்றாகக்கூடி திருமாலிடம் முறையிட விஷ்ணு கருடன் மீதேறி கேசனுடன் போரிட சாகாவரம் வாங்கிய கேசனை திருமாலால் கொல்ல முடியவில்லை. அப்போது பராசக்தி விஷ்ணுவிடம்,” அவனை கொல்ல முடியாது. அவன் மரணமற்றவன். ஆதிசேஷன், கேசனை சுற்றி வளைத்து அரண் கட்டட்டும். நீ அதன்மேல் சயனிப்பாய்” என்று கூற திருமாலும் அதே போல் பள்ளி கொண்டார்.
ஆதிசேஷனின் அணையில் கேசன் அடங்கிவிட்டதை கண்ட கேசி கங்கை நதியை தியானித்தாள். கங்கை இரண்டு நதிகளாக பிரிந்து வந்தாள். அவை ஆதிசேஷனை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஓடி வந்தன. பூமாதேவி பரமன் இருந்த தலத்தை உயரும்படி அருள செய்ய இரண்டு நதிகளும் பரமன் சயனித்த தலத்தை சுற்றிசுற்றி வந்தன. கேசி பெருமாளின் பெருமையை உணர்ந்து பணிந்தாள். கேசன் எல்லா காலத்திலும் எழுந்து விடாமல் இருக்கவும், உலக நன்மைக்காக ஆதிசேஷனின் மேல் துயில் செய்கிறார் பகவான். கேசியால் கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் இரு பிரிவுகளே கோதையாறாகவும் பரளியாறாகவும் ஆயின என்பது ஐதீகம்.
இங்கு அல்லா மண்டபம் உள்ளது. இங்கு நடைபெற்ற பூஜை அல்லா பூஜை எனப்பட்டது. இப்பொதும் அல்லா பூஜை நடைபெற்று வருகிறது.
வழிபாடு
கதழிப்பழம், பால் பாயாசம் வழிபாடு இங்கு சிறப்பு வாய்ந்தது.
கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியுணர்த்தல் நடைபெறுகிறது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
கோவிலில் 1991-ம் ஆண்டும் 1994-ம் ஆண்டும் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட துர்சம்பவங்கள் நடந்துள்ளன. முதல் கொள்ளை வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகள் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் போது கைப்பற்றப்பட்ட நகைகள் கருவூலத்தில் உள்ளன.
சமீபத்தில் குமரி மாவட்டத்துக்கு வருகை தந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், ”கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் கோவிலில் வரையப்படும் மியூரல் ஓவியங்கள் தரமற்று உள்ளன. கோவில் திருப்பணி வேலைகள் மிகவும் தாமதமாக நடக்கின்றது. பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைகள் இன்னும் முடியவில்லை” என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது அதற்கு பதிலளித்த அமைச்சர், ”கோவிலில் தற்போது ஆறரை கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவிலில் வரையப்படும் மியூரல் ஓவியங்களை திருச்சூரில் உள்ள ஓவியக்கல்லூரி முதல்வர் மேற்பார்வையில் வரைவதற்கு ஏற்பாடு செய்யப்படும், இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேக விழா நடத்தப்படும். மேலும் சுவாமி பங்குனி திருவிழாவுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளும் மேற்கு நடையில் பரளியாற்றுக்கு குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட துறையிடம் கூறி சரிசெய்யப்படும்” என்றார்.
விரைவில் பணிகளை நேர்த்தியாக முடித்து கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Next Story