கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் பலி


கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2021 5:16 PM GMT (Updated: 2021-08-06T22:46:17+05:30)

மேல்மலையனூர், விக்கிரவாண்டியில் நடந்த தனித்தனி விபத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

மேல்மலையனூர், 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர், சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  நேற்று முன்தினம் இரவு ராஜா மற்றும் இவருடைய நண்பரான சேத்பட் நிர்மலா நகரை சேர்ந்த ஸ்டான்லி(38) ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து செஞ்சி வழியாக போளூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ஸ்டான்லி ஓட்டி வந்தார். 
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்காரணி கூட்டு சாலை அருகில் வந்தபோது ஸ்டான்லியின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு  ஓடியது. பின்னர் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

பேராசிரியர் பலி

இ்ந்த விபத்தில் ராஜா, ஸ்டான்லி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து, 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்டான்லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி சாவு 

மேல்மலையனூர் அருகே உள்ள கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தாலு(60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முத்தாலு பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்கிரவாண்டி 

விழுப்புரம் மகாராஜபுரம் தாமரைக்குளத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(50).  கூலித்தொழிலாளி. இவர், தனது மனைவி முருகம்மாள் மற்றும் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து மூங்கில்பட்டு நோக்கி புறப்பட்டார். கப்பியம்புலியூரில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விநாயகமூர்த்தி சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விநாயகமூர்த்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story