ஓடும் பஸ்சில் திடீர் தீ, 20 பயணிகளுடன் டிரைவர்-கண்டக்டர் உயிர் தப்பினர்


ஓடும் பஸ்சில் திடீர் தீ, 20 பயணிகளுடன் டிரைவர்-கண்டக்டர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 6 Aug 2021 6:09 PM GMT (Updated: 2021-08-06T23:39:27+05:30)

பொறையாறு அருகே ஓடும் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பயணிகளுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பொறையாறு:
பொறையாறு அருகே ஓடும் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பயணிகளுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
பஸ் தீப்பிடித்து எரிந்தது
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பி.ஆர்.டி.சி. பஸ் நேற்று காலை மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செந்தில்(வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக பரசுராமன்(46) இருந்தார்.
பொறையாறு ராஜீவ்புரம் அருகில் பஸ் சென்றபோது பஸ்சின் முன்பகுதியில் புகை வருவதை கண்டு டிரைவர் சாலையோரம் பஸ்சை  நிறுத்தினார். அப்போது புகை பெருமளவில் வந்ததால் பஸ்சில் இருந்த 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் பஸ்சை விட்டு அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தி்ல் பஸ்சின் என்ஜின் பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
தீயை அணைத்தனர்
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனாலும் பஸ்சின் முன்பகுதி மள மளவென எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் மொகிசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
முன்பகுதி சாம்பல்
இருந்தபோதிலும் பஸ்சின் முன்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. பஸ்சின் எலெக்ட்ரிக்கல் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக காரைக்கால் பணிமனை மேலாளர் குழந்தைவேலு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
பரபரப்பு
இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேதமடைந்த பஸ் காரைக்கால் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இந்த தீவிபத்து, பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story