சாலை அமைக்க எதிர்ப்பு: பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் 10 பேர் மீது வழக்கு


சாலை அமைக்க எதிர்ப்பு: பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2021 8:42 PM GMT (Updated: 6 Aug 2021 8:42 PM GMT)

கருப்பூர் அருகே சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருப்பூர்
சாலை அமைக்க எதிர்ப்பு
கருப்பூர் அருகே வட்டக்காடு காட்டுவளவு பகுதியில் மண் சாலை உள்ளது. இதனை தரம் உயர்த்தி தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்தது. இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் தங்களது பகுதி வழியாக சாலை அமைக்கக்கூடாது என்று தெரிவித்து வந்தனர். இதனால் தகராறு ஏற்பட்டதால் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. 
இந்தநிலையில் அங்கு தார்ச்சாலை அமைக்க தேக்கம்பட்டி ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த இரு தரப்பினரும் சாலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அவர்களுக்கிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. மேலும் அந்த சாலையில் 2 இடங்களில் சுமார் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. 
போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் தேக்கம்பட்டி ஊராட்சி தலைவி சுதா ஆகியோரும் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் பொக்லைன் எந்திரத்தையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
10 பேர் மீது வழக்கு
இதனிடையே அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக காட்டுவளவு பகுதியை சேர்ந்த வரதராஜ், பிரவீன் குமார், சவுந்தர், வேல்முருகன், விஜயகுமார், ராஜ்குமார், முருகன், குப்புசாமி, நல்லப்பன், சந்திரன் ஆகிய 10 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் காட்டுவளவு பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 57) என்பவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என்றும், அவரை மற்றொரு தரப்பினர் கடத்தி சென்றிருக்கலாம் என்று கருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story