கேரளா செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை


கேரளா செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 7 Aug 2021 4:54 AM IST (Updated: 7 Aug 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கேரளா செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லை:
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து உள்ளது. இதையொட்டி அங்கிருந்து தமிழகத்துக்குள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாகனங்களில் வருவோர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டதற்கான சான்றை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால், ரெயிலில் வருகிற பயணிகளை மாநில எல்லையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முடியாது என்பதால், எந்த ஊரில் சென்று இறங்குகிறார்களோ? அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் ரெயில்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்கும் நேற்றுமுதல் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதாவது, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற பரிசோதனை முடிவு செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதைக்கொண்டு அவர்கள் அங்கு தொடர்ந்து பணிபுரியவும் அல்லது தனிமைப்படுத்திக்  கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மதியம் 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரெயிலில் கேரளா சென்ற பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தார்கள்.

இதேபோன்று தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் மற்றும் சுகாதார குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ஏராளமான வாகனங்கள் தமிழகத்தை நோக்கி வந்தன. அவை அனைத்தையும் அதிகாரிகள் குழுவினர் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளதா? என சோதனை நடத்தினர். இதில் சான்றிதழ் இல்லாமல் வந்த 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

Next Story