அன்னூரில் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவத்தால் பரபரப்பு


அன்னூரில் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 7:44 PM GMT (Updated: 2021-08-08T01:41:11+05:30)

அன்னூரில் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த கலெக்டர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார். கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைசெல்வியும், உதவியாளராக அந்த பகுதியை சேர்ந்த முத்துசாமியும் பணிபுரிகின்றனர். 

ஒட்டர்பாளையம், கோபிராசிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பட்டா பெயர் மாற்றம், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுக்காக இந்த அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர் பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆவணங்களுடன் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார். 

அப்போது அங்கு கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, உதவியாளர் முத்துசாமி (வயது 56) ஆகியோர் பணியில் இருந்தனர். கோபால்சாமி அளித்த ஆவணங்களை வாங்கி கலைச்செல்வி சரி பார்த்தார். அதன்பின்னர் போதிய ஆவணங்கள் இல்லை, இன்னும் கூடுதல் ஆவணங்களை கொண்டு வரும்படி அவரிடம் தெரிவித்து உள்ளார்.

இதற்கு கோபால்சாமி ஆட்சேபம் தெரிவித்து, கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், கலைசெல்வியை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனை பார்த்து கொண்டிருந்த உதவியாளர் முத்துசாமி, கிராம நிர்வாக அலுவலரை தரக்குறைவாக பேச வேண்டாம், அவர் ஒரு அரசு அதிகாரி, அவரை திட்டுவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியை தள்ளியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், முத்துசாமியை பார்த்து என்னை எதிர்த்து பேசியதுடன், தள்ளிவிட்டாயா, நான் நினைத்தால் இப்போதே இந்த வேலையில் இருந்து உன்னை தூக்கி விட முடியும் என்று மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். மேலும் தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி முத்துசாமியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த முத்துசாமி வேறுவழியின்றி கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போது அவரது 2 கால்களையும் பிடித்தப்படி மன்னிப்பு கேட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, உதவியாளர் முத்துசாமியை பார்த்து இது தவறு எந்திரியுங்கள், இவ்வாறு செய்யாதீர்கள் என்று கூறினார்.  ஆனால் முத்துசாமி எழுந்து மீண்டும் கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.

மேலும் அங்கிருந்த நபர்களும் முத்துசாமியின் கைகளை பிடித்து தூக்க முயன்றனர். அப்போது, கோபால்சாமி தனது காலில் விழுந்த முத்துசாமியை பார்த்து மன்னித்து விட்டேன், உன்மீதும் தவறு உள்ளது, என்மீதும் தவறு உள்ளது என்று கூறினார்.

கிராம உதவியாளர் முத்துசாமி, ஒருவரின் காலில் விழும் காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்த வீடியோ மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட வருவாய் அதிகாரி லீனா அலெக்ஸ், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே திராவிட அமைப்புகள் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் அன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:-
கிராம உதவியாளரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உதவியாளர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கடந்த வாரம் பன்னிமடை ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளதாக சில அமைப்புகள் புகார் மனு அளித்தனர். அவர்கள் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே அந்த தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற புகார்கள் இருந்தால் அதனை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story