‘கண்ணாமூச்சி’ ஆடும் கருமேகங்கள்; மழைக்காக ஏங்கும் விவசாயிகள்


‘கண்ணாமூச்சி’ ஆடும் கருமேகங்கள்; மழைக்காக ஏங்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 7 Aug 2021 8:44 PM GMT (Updated: 2021-08-08T02:14:05+05:30)

அரியலூரில் மழை ெபய்யாமல் கருமேகங்கள் ‘கண்ணாமூச்சி’ ஆடுவதால், எப்போது மழை பெய்யும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அரியலூர்:

மழை பெய்யவில்லை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக குறிப்பிட்ட அளவிற்கு மழை பெய்யவில்லை. வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அதுபோன்ற மழை பெய்யவில்லை. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பும் அளவிற்கு மழை பெய்யவில்லை. கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் வானில் கருமேகம் சூழ்ந்து, மழை வருவது போன்ற தோற்றம் இருக்கும். 
ஆனால் திடீரென பலத்த காற்று வீசும்போது மேகங்கள் கலைந்து விடும். இந்நிலையில் நேற்று காலை முதலே நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மானாவாரி பயிர்
மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி, சிறு தூறலுடன் நின்று விட்டது. நகரில் உள்ள பள்ளி ஏரி, பட்டு நூல்கார ஏரி, வண்ணான்குட்டை, இருசு குட்டை ஆகியவை நீரின்றி வறண்டுள்ளன. ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிர்களான கடலை, பருத்தி, சோளம், எள், மிளகாய் போன்றவற்றை விதைப்பார்கள். மழை பெய்தால் மட்டுமே அவற்றை விதைக்க முடியும். இதனால் எப்போது மழை பெய்யும் என்று ஏங்கிய நிலையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Related Tags :
Next Story