ஆமை ஓடுகள், மான்கொம்புகள் பறிமுதல்
குமரியில் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆமை ஓடுகள், மான்கொம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரியில் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆமை ஓடுகள், மான்கொம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆமை ஓடுகள், மான்கொம்புகள்
அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓடுகள், மான் கொம்பு மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வனத்துறை உயர் அதிகாரி கிருபா சங்கர் உத்தரவிட்டார். இதனையடுத்து மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று நாகர்கோவில் வந்தனர்.
பின்னர் குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து அழகப்பபுரத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடையில் ஆமை ஓடுகள், மான் கொம்பு, அரிய வகை சங்கு, கடல் விசிறி, முள்ளம்பன்றி உடலில் இருக்கும் முட்களால் செய்யப்பட்ட கலை பொருட்கள், மற்றும் யானை தந்தந்தால் செய்யப்பட்ட அரிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவை அரசால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
பறிமுதல்
இந்த பொருட்களை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை நடத்தி வந்த நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் அரசடி தெருவை சேர்ந்த சங்கர், ஆன்றோ போரஸ் மற்றும் கன்னியாகுமரி ஜோசப் டவுனை சேர்ந்த சாம்ராஜ் ஆகிய 3 பேரையும் பிடித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டவற்றை யாரிடம் இருந்து வாங்கினார்கள், யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள் என்பது குறித்து பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் விற்பனை
இதுபற்றி மாவட்ட வன அதிகாரி அசோக் குமார் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும். இவற்றை சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆன்லைனில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் பலருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
Related Tags :
Next Story