வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2021 5:41 PM GMT (Updated: 8 Aug 2021 5:42 PM GMT)

கோத்தகிரியில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறந்தநாளிலே இந்த சோக முடிவை எடுத்து உள்ளார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறந்தநாளிலே இந்த சோக முடிவை எடுத்து உள்ளார்.

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோட்டாஹால் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் டேவிட் கெவின்குமார்(வயது 24). இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்தார். மேலும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் டேவிட் கெவின்குமார், கோத்தகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. எனினும் அவர்கள் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பிறகு, அவரது குடும்பத்தினரிடம் திருமணம் குறித்து பேசலாம் என்று டேவிட் கெவின்குமாரிடம் கூறியதாக தெரிகிறது. 

காதலி பேசவில்லை

இந்த நிலையில் டேவிட் கெவின்குமாருக்கும், அந்த சிறுமிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரிடம் பேசுவதை சிறுமி தவிர்த்து வந்தார். இதன் காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் டேவிட் கெவின்குமாருக்கு பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு, மதியம் அவர் வீட்டுக்கு திரும்பினார். 

அப்போது வீட்டில் யாரும் இல்லை. பின்னர் தனது அறைக்கு சென்ற அவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர், அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, டேவிட் கெவின்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

விசாரணை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story