மினி பஸ் உரிமையாளர் வீட்டில் 47 பவுன் நகை கொள்ளை


மினி பஸ் உரிமையாளர் வீட்டில் 47 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 11 Aug 2021 6:02 PM GMT (Updated: 11 Aug 2021 6:02 PM GMT)

தக்கலை அருகே மினி பஸ் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே மினி பஸ் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மினி பஸ் உரிமையாளர்
தக்கலை அருகே பள்ளியாடி சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 57), மினி பஸ் உரிமையாளர். இவருக்கு குளோரிபாய் (49) என்ற மனைவியும், 3 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் வெளியூரில் தங்கி நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்.
கடந்த 9-ந் தேதி சுந்தரராஜ் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றார். இதனால், குளோரிபாய் மகளுடன், அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
நகை கொள்ளை
இந்தநிலையில் நேற்று காலை வெளியூர் சென்ற தொழில் அதிபரான சுந்தரராஜ் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வீட்டின் பின்பக்க இரும்பு கேட் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டார். 
உடனே படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், அதில் இருந்த 47 பவுன் நகை, 2 வைர கம்மல், ரூ.3,500 ஆகியவையும் மாயமாகி இருந்தன. 
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகையை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
கேமரா காட்சி...
 பின்னர் இதுகுறித்து சுந்தரராஜ், தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். 
மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மர்ம நபர் டார்ச் லைட் அடித்தவாறு வீட்டுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி, இந்த கொள்ளையில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story