கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Aug 2021 12:37 AM IST (Updated: 14 Aug 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடையநல்லூர்:
வாக்குச்சாவடி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

வாக்குச்சாவடி இடமாற்றம்

கடையநல்லூர் அருகே உள்ளது வலசை கிராமம். இங்கு 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், முன்பு நடந்த தேர்தல்களில் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர். 
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த வாக்குச்சாவடியை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்துக்கு திடீரென மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

யூனியன் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் வலசை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடி எங்களது குடியிருப்புக்கு அருகில் இருந்தது. தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி எங்களது குடியிருப்பில் இருந்து நீண்ட தொலைவில் உள்ளது. எனவே வாக்குச்சாவடியை பழைய இடத்திற்கு மாற்றவில்லையெனில், அரசு எங்களுக்கு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் என அனைத்தையும் அரசிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

பேச்சுவார்த்தை 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர் பொதுமக்கள் கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கந்தசாமியிடம் கோரிக்கை மனு ெகாடுத்து விட்டு, கலைந்து சென்றனர்.

Next Story