கணினி கோளாறால் இலுப்பூரில் நிர்வாக பதவிக்கான தேர்வு ரத்து தேர்வர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
இலுப்பூரில் கணினி கோளாறால் நிர்வாக பதிவிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல்:
நிர்வாக தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நடத்தப்படும் நிர்வாக பதவிக்கான துறைத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து துறையில் பணியாற்றும் தேர்வாளர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர்.
இந்நிலையில், இலுப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற இருந்த தேர்வில் 150 தேர்வாளர்கள் பங்கேற்பதற்காக வந்தனர்.
கணினி கோளாறு
ஆனால் கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாத சூழல் உருவானதையடுத்து தேர்வு எழுத வந்த 150 தேர்வாளர்களும் தேர்வு மையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணி முதல் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வுத்துறை பார்வையாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வருகை பதிவேட்டில் பதிவு
பின்னர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்றைய தேர்வை எழுதுவதற்கு வழிவகை செய்வதாகும், அதற்கான பஸ் வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத தேர்வர்கள் தொடர்ந்து அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் தேர்வு எழுத தயாராக இருப்பதாகவும் ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வழி வகை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதற்கான நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தினால் தேர்வை மறு தேதியில் வைப்பதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும், தேர்வுக்கு வந்தவர்கள் அனைவரும் வருகை பதிவேட்டை பதிவிட்டு செல்லுமாறு அதிகாரிகள் வாக்குறுதி அளித்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து பின்னர் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
Related Tags :
Next Story