100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2021 5:34 PM IST (Updated: 18 Aug 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சிதம்பரம், மாவட்டக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கணேசன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும்.

இதுவரை வேலை அட்டை வழங்கப்படாத மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே வேலை அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் நடராஜன், ஜேசுதாஸ், பாண்டியன், அஞ்சலிதேவி, சதீஷ்குமார், பாலையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். சீர்காழி நகர தலைவர் நடராஜன், நிர்வாகிகள் முருகன், சுரேஷ்குமார், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். தனி என்.எம்.ஆர். பதிவு செய்ய வேண்டும். பாண்டிச்சேரி, மிசோரம் போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இளையராஜா, வைத்தியநாதன், சுந்தர், தீபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story