மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 18 Aug 2021 7:32 PM GMT (Updated: 18 Aug 2021 7:32 PM GMT)

வள்ளியூர் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது இறப்பிற்கு நீதி கேட்டு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது இறப்பிற்கு நீதி கேட்டு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்த தொழிலாளி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் தும்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியாக வள்ளியூரை அடுத்த கீழசண்முகபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் கார்த்திக் ராஜா (வயது 22) வேலை பார்த்து வந்தார்.
நேற்று கார்த்திக் ராஜா மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் உள்ள ஒயரில் மின்சாரம் தாக்கியதில் கார்த்திக் ராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் ராஜா பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கார்த்திக் ராஜாவின் உறவினர்கள் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். கார்த்திக் ராஜா இறப்பிற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் நடந்த பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி  கூறினார்.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று
பணகுடி போலீசில் புகார் தெரிவித்தனர். கார்த்திக் ராஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story