நாமக்கல் அருகே ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
நாமக்கல் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நாமக்கல்:
போராட்டம்
நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேட்டாம்பாடி ஊராட்சி. இங்கு 9 வார்டுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் பெண்களுக்கு சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் ஏராளமான பெண்கள் வார்டு கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைகேடு
இதுகுறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மாதத்தில் 5 அல்லது 6 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அதற்கும் சம்பள தொகை முழுமையாக வழங்கப்படுவது இல்லை. சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் முறைகேடு செய்து வருகிறார்கள். மேலும் பணிக்கு வராதவர்கள் பெயரிலும் சம்பளம் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் பழிவாங்கும் போக்கை அவர்கள் கையாள்கின்றனர்.
முறைகேடு தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற முறைகேடுகள் தொடராமல் இருக்க 100 நாட்களுக்கு ஒரு முறை பணித்தள பொறுப்பாளரை மாற்ற வேண்டும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீஸ் பேச்சுவார்த்தை
பெண்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவது தவறு என்றும், முறைகேடு குறித்து நாமக்கல் கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்குமாறும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story