தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை


தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை
x
தினத்தந்தி 20 Aug 2021 9:04 PM GMT (Updated: 20 Aug 2021 9:04 PM GMT)

ஓணம் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை நடந்தது.

ஆரல்வாய்மொழி, 
ஓணம் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை நடந்தது.
தோவாளை மார்க்கெட்
நாகர்கோவில் அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம்.
மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறார்கள். இதற்காக நேற்று முன்தினம் காலையில் இருந்து தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பூக்கள் விற்பனை
மார்க்கெட்டுக்கு 100 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து குவிந்தன. அதில் 50 வாகனங்களில் கேரளாவுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விடிய, விடிய பூக்கள் விற்பனை ‘களை’ கட்டியது. 
கொரோனா ஊரடங்கு நேரத்திலும் எதிர்பார்க்காத வகையில் கேரளாவில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் திரளாக மார்க்கெட்டுக்கு வந்து போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பூக்களும் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
விலை விவரம் 
பூக்களின் விலை நேற்று முன்தினம் இருந்தது போலவே நேற்றும் இருந்தது. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.1,000, மல்லிகைப்பூ ரூ.1,200-க்கும் விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-
அரளி ரூ.300, முல்லை ரூ.1000, சம்பங்கி ரூ.300, கனகாம்பரம் ரூ.1,500, வாடாமல்லி ரூ.300, தாமரை (100 எண்ணம்) ரூ.1,200, கோழிப்பூ ரூ.150, துளசி ரூ.50, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.230, ஸ்ெடம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.350, மஞ்சள் கிரேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.100, சிவந்தி மஞ்சள் ரூ.170, சிவந்தி வெள்ளை ரூ.280, கொழுந்து ரூ.110, மருக்கொழுந்து ரூ.120 என விற்பனை செய்யப்பட்டது.
200 டன்
ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை குறித்து வியாபாரி கிருஷ்ண குமார் கூறியதாவது:-
ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் சென்ற வருடம் போல பூ மார்க்கெட் மந்தநிலையில் இருக்குமோ? என்று நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு விடிய, விடிய நடந்த வியாபாரத்தில் ஒரே நாளில் 200 டன் பூக்கள் விற்று தீர்ந்தன. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். நல்லவேளையாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகை எங்களை ஏமாற்ற வில்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story