மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை  புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 5:44 PM GMT (Updated: 26 Aug 2021 5:44 PM GMT)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை:
மாணவிக்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், தாஞ்சூர் அருகே இசுகுபட்டி, நாகரெத்தினபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 26). இவர், பாஸ்ட் புட் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது செல்வக்குமார் வழிமறித்து தனக்கு முத்தம் கொடுக்கும் படி மிரட்டியுள்ளார். மேலும் தன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது, அப்படி திருமணம் செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
7 ஆண்டு சிறை
இதைத்தொடர்ந்து போலீசார் செல்வக்குமாரை கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். இதில், செல்வக்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்தமைக்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், ஆபாசமாக பேசியதற்காக ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார். அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார்.

Next Story