தர்மபுரி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தர்மபுரி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 5:14 PM GMT (Updated: 2021-08-27T22:46:03+05:30)

தர்மபுரி அரசு மருத்துவமனையில் நிர்ணயித்த தினக்கூலியை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துவமனையில் நிர்ணயித்த தினக்கூலியை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நேற்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். அகில இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் கோவிந்தராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கி பேசினர். 

நிவாரண உதவி

இந்த போராட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறைகள்படி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஓவர் டைம் வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story