விமானத்தில் வந்த புதுக்கோட்டை வாலிபர் திடீர் சாவு


விமானத்தில் வந்த புதுக்கோட்டை வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 29 Aug 2021 12:47 AM IST (Updated: 29 Aug 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் புதுக்கோட்டை வாலிபர் திடீரென இறந்தார்.

செம்பட்டு, ஆக.29-
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் புதுக்கோட்டை வாலிபர் திடீரென இறந்தார்.
விமானத்தில் வந்தவர்
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 8.15 மணி அளவில் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்  மகன் வேல்முருகன் (வயது 36) இருக்கையில் இருந்து எழுந்திருக்காமல் தூங்கியவாறு இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டாக்டர்கள் வந்து வேல்முருகனை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
உடல்நலக்குறைவு
இதுபற்றிய தகவலின் பேரில் விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்தபோது, வேல்முருகன் மலேசியாவில் சிகை அலங்கார நிலையத்தில் வேலை செய்து வந்ததும், அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதன் காரணமாக அவர் சொந்த ஊர் திரும்பியபோது விமானத்திலேயே இறந்ததும் தெரியவந்தது.
திருமணம் முடிந்து 2 மாதத்திலேயே...
மேலும் வேல்முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே மனைவியை பிரிந்து கோலாலம்பூர் சென்றுவிட்டார்.
 5 ஆண்டுகளுக்கு பின்னர் வேல்முருகன் பிணமாக சொந்தஊருக்கு திரும்பியதால் உறவினர்கள் மீளாத்துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். திருச்சி விமானநிலையத்துக்கு வந்த கணவரின் உடலை பார்த்து மனைவி நிஷா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. வேல்முருகனின் இறப்பு அவரது கிராமத்தினரை சோகத்தில் ஆழத்தி உள்ளது.

Next Story