தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் மீது வழக்கு


தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Aug 2021 7:07 PM GMT (Updated: 29 Aug 2021 7:07 PM GMT)

அய்யம்பாளையம் பகுதியில் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நொய்யல்,
செல்போன் கடை
கரூர் மாவட்டம் பள்ளபட்டி தைக்கால்தெருவை சேர்ந்தவர் முபாரக்அலி. இவரது மகன் பைசக் உஸ்மான் (வயது 27). இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது நண்பர்களான திருவண்ணாமலை அருகே காளிபட்டி கந்தசாமி கல்லூரி சாலையை சேர்ந்த வெங்கடேசன் (25), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நல்லியம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29), பரமத்தி முருகன் ரைஸ்மில் பகுதியை சேர்ந்த நிரோசன் (30) ஆகியோருடன் கரூரில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் கவிழ்ந்தது
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது ஒரு வேன் சாலையின் குறுக்கே வந்தது. இதனால் வேன் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வலதுபுறமாக திருப்பிய போது கார் தாறுமாறாக சென்று தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் கார் பலத்த சேதம் அடைந்தது.
இதையடுத்து, காரிலிருந்து இறங்கி வந்த 4 பேரும் வேன் டிரைவர் மண்மங்கலம் அருகே பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45) என்பவரிடம் இது குறித்து கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் அவர்கள் 4 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பைசக் உஸ்மான் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். 
5 பேர் மீது வழக்கு
அதேபோல் வேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனியார் ஜவுளி நிறுவனத்துக்கு வேனில் ஆட்களை ஏற்றிக்கொண்டு அய்யம்பாளையம் பிரிவில் திரும்பும்போது பின்னால் வந்த கார் ஒன்று நிலைத்தடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்டதற்கு நான்தான் காரணம் என கூறி 4 பேரும் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார்களின் அடிப்படையில் காரில் வந்த பைசக்  உஸ்மான், வெங்கடேசன், கார்த்திக், நிரோசன், வேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story