பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: கார், சரக்கு ஆட்டோவில் 567 கிலோ குட்கா பறிமுதல்-3 பேர் கைது


பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: கார், சரக்கு ஆட்டோவில் 567 கிலோ குட்கா பறிமுதல்-3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 9:27 PM GMT (Updated: 29 Aug 2021 9:27 PM GMT)

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கார், சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 567 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருப்பூர்:
பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கார், சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 567 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா கடத்தல்
பெங்களூருவில் இருந்து கார் ஒன்றில் சேலம் மாவட்டத்துக்கு குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அமானி கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலம் பிரிவில் ஆத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் 10 மூட்டைகளில் குட்கா போதைப்பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 
இந்த நிலையில் அந்த காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  காலுசிங் (வயது 28) என்பதும், பெங்களூருவில் இருந்து காரில் குட்கா போதைப்பொருள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கார் மற்றும் 10 மூட்டைகளில் இருந்த 147 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கருப்பூர்
கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து பெரம்பலூருக்கு சரக்கு ஆட்டோ ஒன்று சுங்கச்சாவடி வழியாக வந்தது. அந்த சரக்கு ஆட்டோவை போலீசார் சோதனையிட்ட போது, அதில் 12 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட 420 கிலோ குட்கா போதைப்பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 
இதையடுத்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் அதில் இருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டு கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. 
மேலும் இ்ந்த கடத்தல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவில் போதைப்பொருட்களை கொண்டு வந்த, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கல்லை வேம்பூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (31), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story