கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிப்பது குறித்து 5-ந் தேதி முடிவு - பசவராஜ் பொம்மை


கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிப்பது குறித்து 5-ந் தேதி முடிவு - பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 31 Aug 2021 9:11 PM GMT (Updated: 31 Aug 2021 9:11 PM GMT)

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதிப்பது குறித்து வருகிற 5-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று முதுல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆலோசித்து முடிவு

  விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகை கொண்டாட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக வருகிற 5-ந் தேதி ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்னதாக கொரோனா பரவலின் நிலை குறித்து நிபுணர் குழு மற்றும் மாவட்டங்களின் ஆலோசனை பெறப்படும். இதுகுறித்து நேற்றே (நேற்று முன்தினம்) எனது தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலேசானை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறித்து போதுமான தகவல்கள் இல்லை. அதனால் அதுகுறித்து முடிவு எடுப்பது ஒத்திவைக்கப்பட்டது. சரியான நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும்.

  அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்டுள்ளோம். பெங்களூருவில் சாலை விபத்தில் தமிழக எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் உள்பட 7 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள்.

விபத்துகளை தவிர்க்க...

  இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், தனது பாதுகாப்பு மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க வேக கட்டுப்பாடு, சிக்னல், வேகத்தடை ஆகியவற்றை மனதில் கொண்டு வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story