புதுக்கோட்டை, அறந்தாங்கி, அன்னவாசல், ஆவுடையார்கோவில்பகுதிகளில் பலத்த மழை முதல் நாள் வகுப்பு முடிந்து திரும்பிய மாணவர்கள் அவதி


புதுக்கோட்டை, அறந்தாங்கி, அன்னவாசல், ஆவுடையார்கோவில்பகுதிகளில் பலத்த மழை முதல் நாள் வகுப்பு முடிந்து திரும்பிய மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 1 Sep 2021 6:31 PM GMT (Updated: 1 Sep 2021 6:31 PM GMT)

புதுக்கோட்டை, அறந்தாங்கி, அன்னவாசல், ஆவுடையார்கோவில் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முதல் நாள் வகுப்பு முடிந்து திரும்பிய மாணவர்கள் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை:
பலத்த மழை
புதுக்கோட்டையில் நேற்று காலை கொஞ்சம் வெயில் இருந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் 3.30 மணிக்கு மேல் லேசாக தூறியடி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. மாலை 4.30 மணிக்கு மேலும் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் முதல் நாள் வகுப்பு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் சிலர் மழையில் நனைந்தபடியும், குடையை பிடித்தப்படியும் சென்றனர். மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர் வந்து இரு சக்கர வாகனங்கள், ஆட்டோவில் அழைத்து சென்றனர்.
 இதேபோல ஆசிரியர்களும் மழையில் பாதிப்படைந்தனர். திடீர் மழையால் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மழை தூறியபடியும், விட்டு, விட்டும் பெய்த படி இருந்தது. இதனால் சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டையில் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் அருகே வேளாண்மை துறை அலுவலகம் பக்கத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதி அடைந்தனர்.
இந்த மழையினால் புதுக்கோட்டை கம்பன் நகரில் வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்தது. மேலும் மழைநீர் தேங்கி நின்றது. பெரியார் நகர் பகுதியில் சாலையில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.
அறந்தாங்கி, அன்னவாசல்
அறந்தாங்கி பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் அங்காங்கே தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்தனர். விவசாயிகள் தற்போது நெல் விவசாயம் செய்துள்ளனர். இந்த மழை நெல் பயிர்கள் வளர உதவும். மேலும் குளம் குட்டையில் தண்ணீர் தேங்கி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளான இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், பெருமநாடு, முக்கண்ணாமலைப்பட்டி, ஆரியூர், மாங்குடி, பரம்பூர், பணம்பட்டி, கடம்பராயன்பட்டி, கூத்தினிப்பட்டி, கீழக்குறிச்சி, பெருஞ்சுனை உள்பட மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆவுடையார் கோவில்
ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story