முறைகேடு நடப்பதாக கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை; விவசாயி தீக்குளிக்க முயற்சி ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு


முறைகேடு நடப்பதாக கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை; விவசாயி தீக்குளிக்க முயற்சி ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 Sept 2021 10:39 PM IST (Updated: 2 Sept 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே முறைகேடு நடப்பதாக கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரிஷிவந்தியம், 

முற்றுகை-சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கடம்பூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் கடம்பூர், மரூர், ம.புதூர், ஓடியந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்கு வைத்து, பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த கடன் சங்கத்தில் கணக்கு வைத்துள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை திருப்பும்போது, ஊழியர்கள் நகைகளை முறையாக வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக கூறி நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் அடகு வைத்த நகைகளை உடனடியாக திருப்பி தரக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி கூட்டுறவு சங்கம் முன்பு உள்ள சங்கராபுரம்-திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயி தீக்குளிக்க முயற்சி

அப்போது விவசாயி ஒருவர் தான் அடகு வைத்த நகையை உடனே திருப்பி தராவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என கூறி தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் மண்எண்ணெய் கேனை அவரிடம் இருந்து பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாலப்பந்தல், பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது போலீசார், பொதுமக்களிடம் முறைகேடு குறித்து கூட்டுறவு சரக கள அலுவலர் கமலகண்ணன் தலைமையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story