மின்னல் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பலி


மின்னல் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Sep 2021 9:26 PM GMT (Updated: 2021-09-03T02:56:03+05:30)

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 30) விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.  அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முகையூர் கிராமத்தை சேர்ந்தவர்  பாலதண்டாயுதம் (55). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடைய வயலில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில் பாலதண்டாயுதம் சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story