ஊருக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டியடித்த இளைஞர்கள்


ஊருக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டியடித்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 3 Sep 2021 12:51 AM GMT (Updated: 3 Sep 2021 12:51 AM GMT)

தேவர்சோலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டியடித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்

தேவர்சோலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டியடித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊருக்குள் வந்த காட்டுயானை

கூடலூர் தாலுகாவில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்து வருகிறது. இதனால் சில சமயங்களில் மனித-காட்டுயானை மோதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தேவர்சோலை போலீஸ் நிலையம் அருகே நேற்று காலை 7 மணிக்கு காட்டுயானை நுழைந்தது. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். 

விரட்டிய இளைஞர்கள்

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சாலையில் காட்டுயானை நடந்து சென்றது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இளைஞர்கள் காட்டுயானையை விரட்டி சென்றனர். பின்னர் அந்த காட்டு யானை சாலையோர தேயிலை தோட்டம் வழியாக தேவன்-2 பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே தேவர்சோலை பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். ஊருக்குள் வந்த காட்டுயானையை இளைஞர்கள் துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பொதுமக்கள் புகார்

இருப்பினும் தேவன்-2 கிராம மக்கள் காட்டுயானை வருகையால் பீதியடைந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

இதனிடையே காட்டுயானை ஊருக்குள் வந்தால் உரிய தகவல் அளித்தும் வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் காட்டுயானையை விரட்டுவதற்கான பணிகளிலும் ஈடுபடுவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர்.


Next Story