சுங்கத்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம்


சுங்கத்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 Sep 2021 8:31 PM GMT (Updated: 3 Sep 2021 8:31 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் எதிரொலியாக சுங்கத்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

செம்பட்டு,செப்.4-
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் எதிரொலியாக சுங்கத்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடத்தல் தங்கம்
கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக  துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் விமானங்களில் தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
பணியிடை நீக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களுக்கு சுங்கத்துறையினர் உதவியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அன்றைய தினம் பணியில் இருந்த சுங்கத்துறை ஆய்வாளர் அசோக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவினை மத்திய சுங்கத்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

Next Story