மண்டியாவில் சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் - மந்திரியிடம் சுமலதா எம்.பி. வலியுறுத்தல்


மண்டியாவில் சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் - மந்திரியிடம் சுமலதா எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Sept 2021 2:55 AM IST (Updated: 5 Sept 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று மந்திரி ஹாலப்பா ஆச்சாரிடம், சுமலதா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு:

மந்திரியுடன் சுமலதா சந்திப்பு

  மண்டியா மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகையும், மண்டியா தொகுதி எம்.பி.யுமான சுமலதா அம்பரீஷ் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கனிம வளத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சாரை, சுமலதா எம்.பி. நேற்று காலையில் சந்தித்து பேசினார்.

  அப்போது மண்டியாவில் தற்போதும் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடந்து வருவதாகவும், அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், இதற்காக மண்டியா மாவட்டத்திற்கு வந்து பார்வையிடும்படியும், மந்திரி ஹாலப்பா ஆச்சாரிடம், சுமலதா எம்.பி. வலியுறுத்தினார். பின்னர் சுமலதா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தடை விதிப்பது குறித்து...

  மண்டியா மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி ஹாலப்பா ஆச்சாரை சந்தித்து பேசினேன். மண்டியா மாவட்டத்திற்கு வந்து பார்வையிடும்படியும் அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும், சட்டவிரோத கல்குவாரிகளுக்கு தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மண்டியா மாவட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மத்தூரில் சொந்த வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளேன்.

  அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் மத்தூர் தொகுதியில் எனது மகன் அபிஷேக்கை வேட்பாளராக நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சந்தா்ப்பமும், சூழ்நிலையும் எப்படி உள்ளது என்பது பார்ப்போம். எதுவும் நமது கையில் இல்லை. கடவுள் கையில் தான் இருக்கிறது. நான்அரசியலுக்கு வருவேன், மணடியா தொகுதி எம்.பி. ஆவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை.
  இவ்வாறு சுமலதா எம்.பி. கூறினார்.

Next Story