மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா


மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sep 2021 9:27 PM GMT (Updated: 4 Sep 2021 9:27 PM GMT)

மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

பள்ளிகள் திறப்பு
தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1-ந் தேதியன்று 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து படித்து வருகின்றனர்.
இதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து அதிகபட்சமாக 20 முதல் 30 மாணவ, மாணவிகள் வரை அமரவைக்கப்பட்டுள்ளனர்.
2 மாணவிகளுக்கு கொரோனா
இந்நிலையில் அரியலூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. இதேபோல் வரதராஜன்பேட்டை அருகே தென்னூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டபோதும், அந்த பள்ளிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன.
மேலும் ஒரு மாணவி
இதற்கிடையே மாணவிக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, அரியலூரில் உள்ள பெண்கள் பள்ளியின் விடுதியில் தங்க வந்த மாணவிகள் உள்பட 270 மாணவிகளுக்கும், ஆசிரியைகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும், திருமானூர் அருகே உள்ள ராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு, அந்த மாணவி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், மாணவிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளியில் வகுப்புகள் வழக்கம்போல் நடந்தன. 
3 ஆக உயர்வு 
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவியையும் சேர்த்து இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 3 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story