கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை; சட்டசபை கூட்டத்தொடரில் மசோதா தாக்கலாகிறது


கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை; சட்டசபை கூட்டத்தொடரில் மசோதா தாக்கலாகிறது
x
தினத்தந்தி 5 Sept 2021 3:41 AM IST (Updated: 5 Sept 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது என்றும், அதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்வது என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

மந்திரிசபை கூட்டம்

  பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா 3-வது அலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருப்பதால், அதற்காக எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், பிற மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

  குறிப்பாக மாநிலத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களால் சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகளிடம் விரிவாக ஆலோசித்தார். பின்னர் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது என்று மந்திரிசபை கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை

  ஆன்லைன் சூதாட்டங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சூதாட்டங்களால் மாணவர்களும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.

  இதன் காரணமாக மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்திருப்பது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரின் போது, மசோதா தாக்கல் செய்வும் மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கம்ப்யூட்டர் டிவைஸ், இணையதளம் மூலமாக நடைபெறும் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் கர்நாடகத்தில் தடை விதிக்கப்படுகிறது.

அரசே இடஒதுக்கீடு...

  ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்திருப்பது மூலம் மாநிலத்தில் ஏராளமானவர்கள் பயன் அடைவார்கள். சாதாரண மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எடுத்துள்ளார். மாநிலத்தில் காலியாக இருந்த மாநகராட்சிகள் மற்றும் நகரசபை, புரசபைகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணிக்கு, அரசு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

  தற்போது தேர்தல் முடிந்திருப்பதால், அந்த அதிகாரிகள் அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்டவற்றுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான இடஒதுக்கீடு, பஞ்சாயத்துகளை மறுவரையறை செய்தல் உள்ளிட்ட பணிகளை அரசே முடிவு செய்யும் என்றும் மந்திரிசபையில் முடிவு செய்துள்ளோம். இதற்காக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

பஞ்சாயத்துகளில் அரசே இடஒதுக்கீடு

  அந்த குழு ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்படும். இதுதவிர கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளும் அந்த குழுவில் இடம் பெறுவாா்கள். இதற்கு முன்பு கிராம பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கான இடஒதுக்கீடுவை தேர்தல் ஆணையம் தான் செய்து வந்தது. இனிமேல் அரசே அந்த இடஒதுக்கீடுவை முடிவு செய்யும் என்று மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  இதற்காக தற்போது இருக்கும் பஞ்சாயத்துராஜ் திட்டத்தில் திருத்தம் செய்யப்படும். அரசு இடஒதுக்கீடு செய்வதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குகள் தொடரப்படும். இதனை தடுக்கவே பஞ்சாயத்துராஜ் திட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். 3-வது அலையை எதிர்கொள்ளும் நோக்கத்தில் மாநிலத்திற்கு தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.17¼ கோடி ஒதுக்கீடு செய்யவும் மந்திரிசை ஒப்புதல் வழங்கி உள்ளது.
  இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.

Next Story