இன்னொரு பெண்ணுடன் செல்போனில் கணவர் பேசியதால் தகராறு: பிளஸ்-2 படிக்கும் மகளுடன் தாய் தற்கொலை


இன்னொரு பெண்ணுடன் செல்போனில் கணவர் பேசியதால் தகராறு: பிளஸ்-2 படிக்கும் மகளுடன் தாய் தற்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2021 5:16 AM GMT (Updated: 2021-09-05T10:46:24+05:30)

இன்னொரு பெண்ணுடன் செல்போனில் கணவர் அடிக்கடி பேசியதால் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த பெண், பிளஸ்-2 படிக்கும் தனது மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை பாடி கலைவாணர் நகர், ஏசுநாதர் தெருவைச் சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 38). இவர்களுக்கு சிவதர்ஷினி (17) என்ற மகளும், சிவனேசன் (11) என்ற மகனும் உள்ளனர். சிவதர்ஷினி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். சிவனேசன், 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அசோக் ராஜபாண்டி, அதே பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று மதியம் அசோக் ராஜபாண்டி, சிவனேசன் இருவரும் ஓட்டலில் இருந்து வீட்டுக்கு வந்தனர்.

தாய்-மகள் தூக்கில் தொங்கினர்

அப்போது தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் மகள் சிவதர்ஷினி இருவரும் வீட்டின் ஹாலில் உள்ள 2 மின்விசிறிகளில் தனித்தனியாக தூக்கில் தொங்குவது கண்டு அசோக் ராஜபாண்டி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மனைவி, மகள் இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தாய்-மகள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜெ.ஜெ. நகர் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போனில் பேச்சு...

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக் ராஜபாண்டி இன்னொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பேச்சுவார்த்தை இல்லாமல் வசித்து வந்தனர்.

இதில் மனம் உடைந்த ராஜலட்சுமி, தனது மகள் சிவதர்ஷினியுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story