சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Sep 2021 6:23 PM GMT (Updated: 5 Sep 2021 6:23 PM GMT)

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் வளர்ப்பு யானைகளை கண்டு ரசித்தனர்.

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் வளர்ப்பு யானைகளை கண்டு ரசித்தனர்.

புலிகள் காப்பகம் திறப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம், சுமார் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு இருக்கிறது. இங்கு முதற்கட்டமாக வாகன சவாரி மற்றும் வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால், 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாகன சவாரி

அவர்கள் தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதை கண்டு ரசித்தனர். மேலும் வனத்துறையின் வாகனங்களில் சவாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட்டனர்.
இன்று(திங்கட்கிழமை) முதல் யானை சவாரி தொடங்கப்படுகிறது. 

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. மேலும் வளர்ப்பு யானைகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இது தவிர வனத்துறையின் தங்கும் விடுதிகளும் திறக்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

களைகட்டியது

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கடந்த 5 மாதங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை புலிகள் காப்பகம் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு துறை சார்ந்த அலுவலக பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. 

தற்போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகம் களைகட்டி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story