அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 5 Sep 2021 6:37 PM GMT (Updated: 5 Sep 2021 6:37 PM GMT)

கவுள்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அதிகாரிகள் விநாயகர் சிலையை அகற்ற வந்ததால் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்
சிறிதளவு பீடம் அமைத்து
பெரம்பலூர் துறைமங்கலம் பகுதிக்கு உட்பட்ட கவுள்பாளையத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளின் அருகே கவுள்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒரு விநாயகர் சிலை இருந்துள்ளது. இந்நிலையில் அதே இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் சிறிதளவு பீடம் அமைத்து, அதில் அந்த விநாயகர் சிலையை நேற்று காலையில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடத்தியுள்ளனர்.
பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் தாசில்தார் சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடத்தியதாக, விநாயகர் சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு பகுதி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மாற்று இடத்தை தேர்வு செய்யுங்கள்
அப்போது பொதுமக்கள் மாற்று இடத்தை தேர்வு செய்யும் வரை விநாயகர் சிலை இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகளும், போலீசாரும் அரசின் அனுமதி பெற்று தான் விநாயகர் சிலை இருக்க வேண்டும். குடியிருப்பு வளாகத்தில் மாற்று இடத்தை தேர்வு செய்து, அதில் அரசு அனுமதி பெற்று சிலை வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் இந்த விநாயகர் சிலை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்படும். மேலும் அரசின் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த நபர்கள் மீது அதிகாரிகள் புகார் கொடுத்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் அதிகாரிகளும், போலீசாரும் விநாயகர் சிலையை அகற்றாமல் சென்று விட்டனர்.

Next Story