கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்


கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Sept 2021 12:08 AM IST (Updated: 7 Sept 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் புது மாப்பிள்ளை பலியானார். சிறுவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

கறம்பக்குடி:
புதுமாப்பிள்ளை பலி
தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வட தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மதியரசன் (வயது 27). இவருக்கு திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது. இவர், தனது அக்கா மகன் ஆகாஷ் (12) என்ற சிறுவனை அழைத்து கொண்டு வேம்பன் பட்டியில் உள்ள அக்கா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்புக்கோவில் சாலை பிலாவிடுதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே கறம்பக்குடி அருகே உள்ள தட்டாவூரணியைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதியரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கர், சிறுவன் ஆகாஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். 
போலீசார் விசாரணை 
இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் விபத்தில் இறந்த மதியரசன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 45 நாட்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story