தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுப்பது குறித்து கலெக்டர் ஆய்வு


தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Sep 2021 9:34 PM GMT (Updated: 7 Sep 2021 9:34 PM GMT)

தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க நிரந்தர தீர்வு காண்பது குறித்து கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி:
தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க நிரந்தர தீர்வு காண்பது குறித்து கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு செய்தார்.
டிக்கடி விபத்து
தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன. இந்த பகுதியில் விபத்துகள் நடக்கும்போது போக்குவரத்து பாதிக்கிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகள் நடக்கும் பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பகுதியில் தற்காலிக தீர்வாக விபத்துக்களை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
விரைவாக ஒப்புதல்
இந்த பகுதியில் விபத்துக்களை குறைக்க சில நடவடிக்கைகளை எடுக்குமாறு சுங்கச்சாவடி நிர்வாகிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், விபத்துக்களை குறைக்க நிரந்தர தீர்வாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தீர்வுக்கான ஒப்புதல்களை விரைவாக பெற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீட்டருக்கு மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு வேகம் கண்காணிக்கும் கருவி மூலம் அபராதம் விதிக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை,  தாசில்தார் செந்தில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story