மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம் + "||" + National Nutrition Month begins at the Tiruvallur Collector's Office

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

திருவள்ளூர்  கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடங்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழா
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ரங்கோலி கோலங்கள் பல வண்ணங்களிலும் வரைந்திருந்தனர். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவு வகைகளான கோதுமை, ராகி, வரகு, குதிரைவாலி மற்றும் அனைத்து திணை வகைகள் மற்றும் மூலிகை பொருட்களான அரியவகை ருசியான மற்றும் சத்தான உணவுப் பொருட்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாரம்பரிய உணவு வகைகள்
அதைத்தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு அடங்கிய பல வண்ணங்களில் போடப்பட்டிருந்த ரங்கோலி வண்ண-கோலங்களை கலெக்டர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பாரம்பரிய உணவு வகைகளான சாமை, கோதுமை, ராகி போன்றவற்றில் செய்யப்பட்டிருந்த உணவு வகைகளை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்த்து சாப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.