அரசு பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்


அரசு பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 9 Sep 2021 5:16 PM GMT (Updated: 9 Sep 2021 5:16 PM GMT)

விழுப்புரத்தில் சமூக இடைவெளியை மறந்து அரசு பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்காக 385 அரசு, தனியார் பள்ளிகளும், 69 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் நகரில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு அரசு பஸ்கள் மூலமாக வந்து செல்கின்றனர். மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு செல்ல அரசு டவுன் பஸ்களுக்காக விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக கிராமப்புறங்களுக்கு கூடுதலாக பஸ் வசதி இல்லாததால் ஒரு சில பஸ்கள் மட்டும் வருவதால் அந்த பஸ்களில் மாணவ- மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றியே பயணம் செய்ய வேண்டும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதியை பின்பற்றியே பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஸ்களில் கூட்டநெரிசல்

ஆனால் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை வேளையில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களில் பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் ஏறி பயணம் செய்வதால் சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மாணவ- மாணவிகள் கூட்டநெரிசலில் பயணம் செய்வதால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி போதிய பஸ் வசதி இல்லாததால் இயக்கப்படுகின்ற சில பஸ்களிலும் இருக்கை கிடைக்காத மாணவர்கள் உயிரை பணயம் வைத்துக்கொண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதையும் காண முடிகிறது. கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதே தவறென சொல்லப்படும் நிலையில் மாணவர்கள் இப்படி கூட்டம், கூட்டமாக, அதுவும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பெற்றோரையும், பொதுமக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

இந்த சூழலை சமாளிக்க பள்ளி மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story