பரமத்திவேலூர் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


பரமத்திவேலூர் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 6:58 PM GMT (Updated: 2021-09-10T00:28:50+05:30)

பரமத்திவேலூர் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
மரக்கன்றுகள்
பரமத்திவேலூர் அருகே கொந்தளம் ஊராட்சிக்கு‌ட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காய்ந்து போன மரக்கன்றுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடுவதற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் நேற்று குழிகள் தோண்டப்பட்டன.
அப்போது குழி ஒன்றில் பெரிய அளவிலான பானை ஒன்று இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். மேலும் அந்த பானைக்குள் மண்ணுடன் எலும்புக்கூடுகள் மக்கிய நிலையில் இருந்ததால் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சந்திரசேகரனிடம் தெரிவிக்கப்பட்டது.
முதுமக்கள்தாழி
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், கொந்தளம் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பழனிசாமி ஆகியோர்‌‌ அங்கு வந்தனர். அப்போது அதை முதுமக்கள் தாழி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து குழிக்குள் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை மீட்டு பத்திரமாக மீட்டு கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். சேலம் தொல்பொருள் துறையினர் முதுமக்கள்தாழியை ஆய்வு செய்த பின்னரே அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் இந்த முதுமக்கள் தாழியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

Next Story