கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்


கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 11:14 PM GMT (Updated: 9 Sep 2021 11:14 PM GMT)

வாராந்திர விடுமுறை வழங்கக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றினர்.

திருப்பூர்
வாராந்திர விடுமுறை வழங்கக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றினர். 
கருப்பு பேட்ஜ் அணிந்த செவிலியர்கள்
கொரோனா தொற்று காரணமாக கிராம சுகாதார செவிலியர்கள் பல மாதங்களாக விடுப்பு இல்லாமல் பணிபுரியும் நிலை உள்ளது. இதனால் பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே கட்டாயமாக ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை வழங்க வேண்டும், கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.  
அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். மங்கலம், முதலிபாளையம் சிட்கோ உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராமப்புற செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.
200 பேர் பங்கேற்பு 
இது குறித்து தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் ராணி கூறுகையில், “கிராமப்புற சுகாதார செவிலியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாகவும், அரசுக்கு தெரிவிக்கும் விதமாகவும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி மனு கொடுக்கும் மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டமும், 3 நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டமும் நடந்து வருகிறது. 
நேற்று நடந்த போராட்டத்தில் 200 செவிலியர்கள் பங்கேற்றனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.” என்றார். 

Next Story