வெவ்வேறு சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் வெவ்வேறு சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை
வாய்க்காலில் விழுந்தார்
கரூர் மாவட்டம், குளித்தலை புதுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் அப்துல்ரசீத் மகன் முஸ்தாக் (வயது 33). இவர் கரூரில் உள்ள போட்டோ பிரேம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லையாம். இதனால் மனவேதனையில் அவர் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த முஸ்தாக் குளித்தலை சபாபதி நாடார் தெரு அருகே உள்ள வாய்க்காலில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
சாவு
இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியில் வாய்க்காலில் குளிக்க சென்றவர்கள் தண்ணீரில் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த உடலை வாய்க்காலில் இருந்து மீட்டு பார்த்தபோது அவர் முஸ்தாக் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முஸ்தாக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு வாலிபர்
கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் நாவரசன் (22). இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர் தூத்துக்குடியை சேர்ந்த இப்ராஹிம் (20) என்பவருடன் நேற்று மாயனூர் கதவணைக்கு வந்து சுற்றி பார்த்தார். பின்னர் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிட்டனர்.
பின்னர் நாவரசன் காவிரி ஆற்றில் கை கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது பாசி வழுக்கி நாவரசன் தவறி காவிரி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story