உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்


உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்
x
தினத்தந்தி 10 Sep 2021 7:01 PM GMT (Updated: 10 Sep 2021 7:01 PM GMT)

2 நாள் சுற்றுப்பயணமாக உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.

புதுக்கோட்டை, 
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அதன்படி இன்று (சனிக்கிழமை) மாலை 5.40 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் கருணாநிதி நினைவு நாள் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 1,200 இளைஞர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
அதன்பின்பு மாலை 6.15 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா புதுக்கோட்டை கோவில்பட்டி கருப்பர்கோவில் திடலில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 7 மணியளவில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இதையடுத்து, இரவு 7.45 மணியளவில் அரிமளம் ஒன்றியம் லெணாவிளக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதை தொடர்ந்து கடியாபட்டியில் உள்ள விடுதியில் தங்குகிறார். 12-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டு காலை 8.45 மணிக்கு புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறார். 
அதை தொடர்ந்து 9.30 மணிக்கு ஆலங்குடியில் தனியார் மருத்துவமனையை தொடங்கி வைக்கிறார். பின் வாணக்கன்காட்டில் காலை 10 மணியளவில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
கறம்பக்குடியில் ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து காலை 11.40 மணியளவில் கந்தர்வகோட்டையில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். பிற்பகல் 12 மணிக்கு முன்னாள் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. மாரியய்யா நினைவு மண்டபத்தையும் திறந்து வைக்கிறார். அதன்பின்பு அங்கிருந்து கார் மூலம் திருச்சி செல்கிறார்.

Next Story