தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிபா, ஜிகா வைரஸ் சிகிச்சைக்கு 20 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தொடக்கம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிபா, ஜிகா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:
கேரள மாநிலத்தில் நிபா மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இந்த வைரஸ்கள் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நிபா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் குறித்து தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தனி வார்டு
இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறுகையில், தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ், ஜிகா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 படுக்கைகள் கொண்ட தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவ கண்காணிப்பாளர், 3 டாக்டர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிபா, ஜிகா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நோய் தடுப்பு பணிக்காக தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு கேரள எல்லையில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story