தொகுப்பு வீட்டுக்கு ஏங்கும் ஆதிவாசி மக்கள்


தொகுப்பு வீட்டுக்கு ஏங்கும் ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 11 Sept 2021 9:39 PM IST (Updated: 11 Sept 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே தொகுப்பு வீட்டுக்கு ஆதிவாசி மக்கள் ஏங்கி வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே வட்டக்கொல்லி ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை அல்லது ஓடுகள் வேயப்பட்ட மண் வீடுகளில் வாழ்கின்றனர். இவை கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டதால், வலுவிழந்து காணப்படுகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. 

மேலும் மேற்கூரைகளும் சேதமடைந்து இருப்பதால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் குழந்தைகளுடன் ஆதிவாசி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தவிர அந்த காலனிக்கு செல்லும் நடைபாதை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக முதியவர்கள் நடந்து செல்லும்போது கால் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்தால் கூட விரைவாக தப்பி ஓட முடியாத நிலை இருக்கிறது. 

எனவே தொகுப்பு வீடு, நடைபாதை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வட்டக்கொல்லி ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்டக்கொல்லி ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை. பல ஆண்டுகளாக மண் வீடுகளில்தான் வசித்து வருகிறோம். தொகுப்பு வீடு கட்டி தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் தொகுப்பு வீட்டுக்காக ஏங்கும் நிலை உள்ளது.

இது மட்டுமின்றி நடைபாதை உள்ளிட்ட வசதிகளும் இல்லை. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும், அடிக்கடி மழை பெய்வதாலும் பாழடைந்த வீடுகளில் வசித்து அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story