விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரத்தான்
ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் 400 இடங்களில் 40,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வண்ணம் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடத்துதல், வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் மூலம் ஊக்குவிப்பு செய்தல், ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தல், கொரோனா வைரஸ் பற்றியும் தடுப்பூசி நன்மைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல் போன்றவைகள் மூலம் ஊக்குவிப்பு செய்தல் முகாம் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் சுய உதவி குழுக்கள், சமூக ஆர்வலர்கள், செஞ்சிலுவை சங்கங்கள் போன்ற இதர தன்னார்வலர்கள் மூலம் ஊக்குவிப்பு செய்து அதிக அளவில் தடுப்பூசி செலுத்த தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து இன்று (அதாவது நேற்று) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து நாளை நடைபெறவுள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள மாபெரும் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கி தங்கள் இருப்பிடம் அருகே நடைபெறும் முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்களுடைய ஆதார் அட்டை (அல்லது) இதர அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவுற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story