மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 3 வாலிபர்கள் பலி
சென்னகிரி அருகே லாரி மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலியானார்கள். அவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி உறவினர் வீட்டுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு: சென்னகிரி அருகே லாரி மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் ெசன்ற 3 வாலிபர்கள் பலியானார்கள். அவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி உறவினர் வீட்டுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா மல்லேஸ்வரா கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜ்ஜய்யா (வயது 19), மஞ்சு (18), தேவராஜ் (19). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட சென்னகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மல்லேஸ்வரா கிராமத்தின் வெளிப்பகுதியில் சென்றபோது, சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புராவில் இருந்து சென்னகிரி நோக்கி வந்த லாரியும், அவர்களின் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
3 பேர் சாவு
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், அஜ்ஜய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள், விரைந்து வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சென்னகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story