சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,011 வழக்குகளுக்கு சமரச தீர்வு


சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,011 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 12 Sept 2021 2:35 AM IST (Updated: 12 Sept 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 11 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சேலம்
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அதன்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஆபிரகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் உள்பட நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த கலைச்செல்விக்கு நஷ்டஈடாக ரூ.9 லட்சத்து 26 லட்சமும், இதேபோல் மற்றொரு விபத்தில் படுகாயம் அடைந்த தனசேகரன் என்பவருக்கு இழப்பீடு தொகையாக ரூ.9 லட்சத்து 98 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வழங்கினார்.
சமரச தீர்வு
சேலம், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 211 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் 3 ஆயிரத்து 11 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.38 கோடியே 26 லட்சத்து 66 ஆயிரத்து 307 உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 5 ஆண்டுகளுக்கு மேலாக கோர்ட்டில் நிலுவையில் உள்ள 45 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு சமரசம் செய்து முடித்து வைக்கப்பட்டது. விவாகரத்து கோரிய 2 தம்பதியினர் மக்கள் நீதிமன்றத்தில் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story