குமரியில் இன்று 7 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது


குமரியில் இன்று 7 மையங்களில்  நீட் தேர்வு நடக்கிறது
x
தினத்தந்தி 11 Sep 2021 9:18 PM GMT (Updated: 11 Sep 2021 9:18 PM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நடக்க இருக்கும் நீட் தேர்வை 4,142 பேர் எழுதுகிறார்கள்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நடக்க இருக்கும் நீட் தேர்வை 4,142 பேர் எழுதுகிறார்கள்.
7 மையங்களில் நீட் தேர்வு
நாடு முழுவதும் தேசிய மருத்துவ நுழைவு தேர்வான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. அதில் மொத்தம் 4 ஆயிரத்து 142 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
நாகர்கோவில் வின்ஸ் பொறியியல் கல்லூரியில் 900 பேரும், அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் 600 பேரும், தோவாளை லயோலா பொறியியல் கல்லூரியில் 600 பேரும், சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க கல்லூரியில் 600 பேரும், இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரியில் 600 பேரும், நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 420 பேரும், ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரியில் 422 பேரும் என மொத்தம் 4,142 பேர் 'நீட்' தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
வழக்கம் போல் இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா விதிகளை பின்பற்றவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் செல்போன், ப்ளூ டூத், எலக்ட்ரானிக் பொருட்கள், கருவிகள், பென்சில், கைெகடிகாரம், துண்டு காகிதங்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு கூடத்திற்கு எடுத்து செல்ல அனுமதியில்லை.
தேர்வு கூடத்திற்கு தெளிவான தண்ணீர் பாட்டில், விண்ணப்பத்துடன் தற்போது எடுத்த புகைப்படம் (வருகை பதிவில் ஒட்டுவதற்கு), சானிடைசர் 50 மில்லி, சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதற்காக தேவையான மாத்திரைகள் போன்றவை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். நீண்ட கையுள்ள சட்டைகள், பெரிய பட்டன் கொண்ட சட்டைகள் மாணவர்கள் அணிந்து வர அனுமதியில்லை. மத சம்பந்தமான ஆடைகள் அணிந்து வருவோர் பரிசோதனைக்காக காலை 11.15 மணி முதல் தேர்வு மையத்திற்கு வந்திருக்க வேண்டும். பின்னர் 1.15 முதல் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.முன்னதாக சுகாதார பணியாளர்கள் மூலம் அனைத்து தேர்வு மையங்களிலும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன.

Next Story