510 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


510 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Sept 2021 9:11 PM IST (Updated: 13 Sept 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 510 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்த போலீசார் தலை மறைவாக உள்ள மொத்த வியாபாரியை தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 510 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்த போலீசார் தலை மறைவாக உள்ள மொத்த வியாபாரியை தேடிவருகின்றனர்.
பதுக்கல்
ராமநாதபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின்பேரில் உட்கோட்ட குற்றபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் பட்டாபிராமன் உள்ளிட்ட போலீசார் நகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராமநாதபுரம் நகரில் ஆட்டோவில் பெட்டி பெட்டியாக கொண்டு சென்ற பொருட்களை மடக்கி சோதனையிட்டனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த செல்லையா மகன் செந்தில்குமார் (வயது37) என்பவரை பிடித்து கைது செய்தனர். 
விசாரணை
அவர் அளித்த தகவலின்படி நேருநகர், மஞ்சனமாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் இருந்த கிடங்கில் இருந்த பெட்டி பெட்டியாக புகையிலை பொருட்களையும், அந்த ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 27 பெட்டிகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 515 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் மேற்கண்ட புகையிலை பொருட்களை ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடையை சேர்ந்த சுந்தரம் மகன் திருமுருகன் (32) என்பவர்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இந்த புகையிலை பொருட்களை பல்வேறு குடோன்களில் பதுக்கி வைத்து ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் வரை ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரை கைது செய்து மொத்த வியாபாரியான திருமுருகனை தேடிவருகின்றனர். இவர் எங்கிருந்து இந்த புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார். இதில் தொடர்பு உடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story